ஞானவேலு 's Rough Note

ஞானவேலு 's Rough Note மனதின் கிறுக்கல்கள்

தேநீர்எனக்குத்தேநீர் என்பதுதாகம் தணிக்கும் பானமல்ல…அதுஎன் தந்தையின்வியர்வை மணக்கும்வாழ்வாதாரம்.ஊரின் கண்கள்இன்னும் இருளு...
10/08/2026

தேநீர்

எனக்குத்
தேநீர் என்பது
தாகம் தணிக்கும் பானமல்ல…

அது
என் தந்தையின்
வியர்வை மணக்கும்
வாழ்வாதாரம்.

ஊரின் கண்கள்
இன்னும் இருளுக்குள்
கனவு பார்த்துக்கொண்டிருக்க,

அதிகாலை மூன்று மணிக்கே
அப்பாவின் பொழுது
விடிந்துவிடும்.

மீன் மார்க்கெட் அருகே,
அதிகாலை
சேவல் கூவக் காத்திருக்காது
எங்கள் தேநீர்க்கடை;

அப்பா கதவு திறந்த பிறகுதான்
அங்கே விடியலே
கண் விழிக்கும்!

விறுவிறுவென
அடுப்பு மூட்டி,
பால் வைத்து,
அளவறிந்து நீர் கலந்து,

பாய்லரில்
தண்ணீரைக் கொதிக்கவிட்டு,

பார்த்துப் பார்த்து வாங்கிய
தேயிலையைத் தூவுகையில்
எழும் அந்த மணத்தில்
மெல்லக் கரையத் தொடங்கும்
இரவின் மிச்சம்.

பாய்லரின் நீராவி
அவர் முகத்தை வருட,

அடுப்பின் நெருப்பு
அவர் கண்களில் மின்ன,

கொதிக்கும் தேநீரோடு
அன்றைய எங்கள் வாழ்க்கையும்
கொதிக்கத் தொடங்கும்.

முதல் தேநீர்
எப்போதும்
அப்பாவுக்குத்தான்.

கோப்பையை ஏந்தி
ஒரு மடக்கு பருகுவார்…

ஒரு கணம்
கண்களைச் சுருக்குவார்…

அந்த ஒரு மடக்கில்
பால் பேசும்,
தேயிலை பேசும்,
சர்க்கரை பேசும்.

அதைவிட—

அன்று வரப்போகும்
நூறு நாவுகளின்
சுவையும் பேசும்.

எல்லோருடைய நாக்கையும்
சந்திப்பதற்கு முன்பே
அந்தத் தேநீரின்
சாதக பாதகங்களை
அறிந்திருந்தது
அப்பாவின் நாக்கு.

அவர் பருகியது
முதல் தேநீரல்ல…

அன்றைய நாளின்
முதல் பொறுப்பு.

பிறகு—

கண்ணாடிக் கோப்பைகள்
கலகலக்கும்,

கரண்டிகள்
தாளமிடும்,

பாய்லர்
பெருமூச்சுவிடும்,

“ஒரு டீ…”
“ரெண்டு டீ…”
என்ற குரல்களுக்கிடையே

அப்பாவின் கைகள் மட்டும்
நிற்காமல்
வாழ்க்கையை ஆற்றிக்கொண்டிருக்கும்.

ஒரு கையிலிருந்து
இன்னொரு கைக்கு
தேநீர் மாறும்;

ஒரு காசோடு
இன்னொரு காசு சேரும்;

அந்தச் சில்லறைகளுக்குள்
எங்கள் சாப்பாடு இருந்தது,
எங்கள் உடை இருந்தது,
எங்கள் படிப்பு இருந்தது,

எங்களுக்கான
அப்பாவின் கனவுகளும்
ஒளிந்திருந்தன.

எத்தனையோ பேருக்கு
அவர் கொடுத்தது
ஒரு கோப்பைத் தேநீர்.

ஆனால்—

ஒவ்வொரு கோப்பையிலும்
எங்களுக்காக
கொஞ்சம் கொஞ்சமாய்
அவர் வாழ்க்கையையும்
ஊற்றிக்கொண்டிருந்தார்.

அப்போது
எனக்குப் புரியவில்லை…

அடுப்பின் வெப்பத்தைவிட
அதிகமாய்
அவர் வியர்த்ததன் காரணம்.

விடியலுக்கு முன்பே
அவர் விழித்ததன் காரணம்.

ஊருக்குத்
தேநீர் கொடுப்பதற்காக மட்டும்
அவர்
அதிகாலை மூன்று மணிக்கு
எழுந்திருக்கவில்லை…

எங்கள் வாழ்க்கையை
எழுப்புவதற்காகவும்தான்.

காலம்
எத்தனையோ தேநீர்க் கோப்பைகளை
என் கைகளில்
கடத்திச் சென்றுவிட்டது.

எத்தனையோ சுவைகள்…

எத்தனையோ கடைகள்…

எத்தனையோ தேயிலைகள்…

ஆனால் இன்றும்
தேநீரின் முதல் நீராவி
என் முகத்தில் படும்போதெல்லாம்,

எங்கிருந்தோ
அந்த மீன் மார்க்கெட்டின்
அதிகாலை வாசம் வருகிறது…

பாய்லரின்
பெருமூச்சு கேட்கிறது…

கண்ணாடிக் கோப்பைகளின்
கலகலப்பு கேட்கிறது…

அவற்றுக்கிடையே
விறுவிறுவென நகரும்
அப்பாவின் கைகளும்
தெரிகின்றன.

ஒரு மடக்கு பருகுகிறேன்…

தேநீர்
தொண்டைக்குள் இறங்குகிறது.

அப்பா
நினைவுக்குள் இறங்குகிறார்.

அதனால்தான்—

எனக்குத்
தேநீர் என்பது
ஒரு பானமல்ல.

அது
என் தந்தையின்
வியர்வை கலந்து
எங்களுக்குக் கிடைத்த
வாழ்க்கை.

அவர்
ஊருக்கெல்லாம்
கோப்பை கோப்பையாகத்
தேநீர் ஊற்றினார்…

எல்லோருக்கும்
அப்பா… டாடி…

எனக்கு மட்டும்
என் அப்பா — டாடீ! ☕❤️

#அப்பா #தேநீர் #நினைவுகள் #வாழ்க்கை #தேயிலைமணம் #அப்பாவின்வியர்வை

12/01/2026

1960-களில் நம் முன் தலைமுறை முன்னெடுத்த அந்த வீரமிக்க மொழிப் போராட்ட வரலாற்றைத் திரையில் காண ஆவலோடு இருந்தேன். ஆனால், இன்று உலகம் முழுவதும் 'பராசக்தி' திரைப்படம் வெளியாகி இருக்கும் தியேட்டர்களில் இருக்கைகள் வெறிச்சோடிக்கிடப்பதைக் காண்பது மிகுந்த மனவேதனை அளிக்கிறது.

ஆயிரக்கணக்கான பக்கச்சார்பான கட்டுரைகள், திரைக்கு வெளியே திட்டமிட்டுப் பரப்பப்பட்ட போலி விமர்சனங்கள், பள்ளி மாணவர்களைக் கட்டாயப்படுத்தி அழைத்துச் சென்றது, ஏன்... போக்குவரத்து நெரிசல் என ஒரு முன்னணி நாளிதழ் பரப்பிய போலிச் செய்திகள் என எத்தனையோ 'வித்தைகள்' செய்தும் மக்கள் மனதை வெல்ல முடியவில்லை.

இதற்கான காரணம் மிகத் தெளிவானது: புனிதமான போராட்ட வரலாற்றை ஒரு குறிப்பிட்ட கட்சியின் அரசியல் லாபத்திற்காக (Party Agenda) பயன்படுத்த முயன்றதும், அந்த ஆட்சியின் மீது மக்கள் கொண்டுள்ள கடும் அதிருப்தியுமே (Anti-incumbency) இந்த நிலைக்குக் காரணம். மக்கள் எதையும் திணிக்க விரும்புவதில்லை; அவர்கள் தங்களுக்குப் பிடித்தமான, தாங்கள் உண்மையிலேயே நேசிக்கும் ஒரு நாயகனைத் தேடுகிறார்கள்.

செயற்கையான விளம்பர வெளிச்சங்கள் ஒருபோதும் மக்களின் உண்மையான அன்பிற்கு ஈடாகாது. காலம் மாறிவிட்டது, மக்களின் ரசனையும் தேடலும் இப்போது ஒரு புதிய திசையை நோக்கித் திரும்பியுள்ளது.

உண்மையான மக்கள் சக்தியின் முன்னால் எந்த அதிகார பலமும் எடுபடாது என்பதற்கு இந்த வெறிச்சோடிய தியேட்டர்களே சாட்சி.

"ஜனநாயகம் வெல்லும்... ஜனநாயகன் வெல்வான்!"

Address

Gold Coast, QLD

Website

Alerts

Be the first to know and let us send you an email when ஞானவேலு 's Rough Note posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share