03/06/2026
ஒரு ஆழ்ந்த நிசப்தம்...
உன் திருமண சேதி என் தாய் சொல்லி கேட்டறிந்தேன்... ம்ம்...
தகவல் வந்து சேர்ந்த வினாடியிலிருந்து நம்
இருவருக்குமான அந்த கடைசி பேருந்து நிறுத்த உணவு விடுதி தருணம் தான் நினைவில் தோன்றியது...
2019
நீ உன் கல்லூரி விழாவினில் நடனம் ஆடி
கலைத்து சோர்வாய் என்னை பார்க்க வந்தாய்... வந்தேன்...
ஏராளமான கதைகள் பேசினாய், கண்கள் சிமிட்டினாய் ஏதோ ஒரு படபடப்பில்...
முத்தம் கேட்டாய், உணவருந்த சென்றோம்..
உனக்கு பிடித்த நூடுல்ஸ் order செய்தோம்...
உணவு அருந்தி கொண்டே உரையாடலை தொடங்கிய நீ உரையாடலின் முடிவாய் உன் வீட்டில் நடந்ததை சொன்னாய்..
அம்மா நம் காதலை ஏற்றுக்கொள்ளமாட்டாள்,
அக்காவும் எனக்கு நீ வேண்டாம் என்று கூறுகிறாள், அவர்கள் இருவருக்கும் நாம் இருவரும் நேசிப்பது தெரிந்துவிட்டது..
அக்கா என்னை கடுமையாக கண்டித்தாள்.
என்னவென்று..?
கபிலன் நம் caste இல்லை அதனால் நம் குடும்பத்தில் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள், மேலும் அவன் குடும்பம் பொருளாதாரத்திலும் குறை உடையவர்கள்.
உனக்கு இப்போ புரியாது கல்யாணத்துக்கு அப்புறம் பணம் தான் ரொம்ப முக்கியம் கபிலன் கிட்ட அதுவும் கிடையாது கொஞ்சம் உன் வாழ்க்கைய அக்கறையா யோசினு அக்கா சொல்றானு நீ சொன்ன...
நான் கேட்டேன்... அவ சொல்லட்டும் அபி..
நீ என்ன நினைக்குற உனக்கு இதுலாம் பிரச்சனையா...
வினாடி பொழுதில் இல்லை இல்லை அவ கடக்குற நீ தான் எனக்கு வேணும்னு சொன்ன..
உணவருந்திய பின் உன்னை உன் ஊருக்கு அனுப்ப பெரம்பலூர் பேருந்து நிறுத்தத்துக்கு நானும் என் நண்பனும் ஒண்ணா வந்தோம்...
உன் ஊரின் பெயர்ப்பலகை போட்ட பேருந்தில் நீயும் நானும் ஒன்றாய் அமர்ந்திருக்க நண்பர்கள் இருவரும் கடைவீதியில் நின்றார்கள்.
ஏதோ ஒரு எண்ணம் நான் மறுபடியும் உன்னை கேட்டேன் உன் அக்கா சொன்னதில் உனக்கும் விருப்பம் இருக்கா என்று, இல்லவே இல்லை என்று கூறி சட்டென எனக்கு
முத்தம் கொடுத்தாய்...
பிணத்தின் ஊர்வலம் முடியும் தருவாயில் அதன் மீது இறுதியாய் போடப்படும் பூமாலை போல் அந்த முத்தம் இறுதியாய் இருக்குமென எண்ணவில்லை நான்...
அபி... ஊருக்கு சென்றவுடன் நான் பத்திரமாக வந்து சேர்ந்துவிட்டேன் என எனக்கு call பண்ணி சொல் என்று நம் உரையாடலை முடித்து உன்னை அனுப்பிவைத்தேன்..
பேருந்து என் கண் திசையில் இருந்து மறையும் வரை ஜன்னல் இருக்கையில் அமர்ந்திருந்த உன்னை பார்த்துக்கொண்டே இருந்தேன்...
நீ எனக்கு முத்தம் கொடுத்துவிட்டு ஊருக்கு சென்று "7 வருடங்கள்" கழிந்துவிட்டது.
நான் இன்னும் உன் அழைப்புக்காக காத்திருக்கிறேன் காரணம்
என்னுடைய ,
"அபி பத்திரமாக சென்றாலா என்று இன்னும் எனக்கு தகவல் சொல்லவில்லையே".